கடலூர் மாவட்டம், எம்.புதூர் பகுதியில் அமைந்துள்ளது நாட்டு வெடி தயாரிக்கும் குடோன்.இது பெரியகாரைக்காடு பகுதியைச் சார்ந்த வனிதா என்பவருக்கு சொந்தமான இடமாகும்.இதன் உரிமம் அவர் பெயரில் உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் உட்பட அனைத்தும் வெடித்ததில் அங்கு பணியில் இருந்த சி.என்.பாளையம் பகுதியைச் சார்ந்த சத்யராஜ்,பெரிய காரைக்காடு பகுதியைச் சார்ந்த சித்ரா மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியைச் சார்ந்த வசந்தா ஆகிய 3பேர் வெடி விபத்தில் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.இதில் விபத்தில் சிக்கிய 50 வயதுடைய வசந்தா என்ற பெண் 85 சதவீத தீக்காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வெடி வாங்கச் சென்றதாக கூறப்படும் வைத்திலிங்கம் என்பவர் சிறிய காயங்களுடன் அவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் சிக்கி பலியான உடல்கள் அனைத்தும் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தொழிற்சாலையின் உரிமம் 2021 வரை மட்டுமே உள்ளது. 2021 முதல் 24 வரை உரிமம் புதுப்பிப்பதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பாப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment